10TH-TAMIL-PUBLIC QUESTION -2023

 

மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் - 2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                மதிப்பெண் : 100

________________________________________________________________________

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)          அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)         கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                     15×1=15

1. 1.எறும்புந்தன் கையால் எண்சாண் – இத்தொடரில் உள்ள எண்ணுப்பெயர் _________

அ) எறும்பு     ஆ)  தன்கை இ) எண்      ஈ) சாண்

2. “ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி “ என்னும் அடியில் பாக்கம் என்பது ___

அ) புத்தூர்     ஆ) மூதூர்     இ) பேரூர்      ஈ) சிற்றூர்

3.’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

அ) திருத்தணியும்,திருப்பதியும்      ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்

இ) திருப்பதியும் திருத்தணியும்     ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்

4. வாய்மையே மழை நீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை  ஆ) தற்குறிப்பேற்றம்          இ) தீவகம்     ஈ) உருவகம்

5. “கீதாஞ்சலி” என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் ____________

அ) ராகும் சாங்கிருத்யாயன்          ஆ) கணமுத்தையா          

இ) யூமா வாசுகி                          ஈ) இரவீந்தநாத் தாகூர்

6. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

அ) உழவு,மண்,ஏர்,மாடு                          ஆ) மண்,மாடு,ஏர்,உழவு     

இ) ஏர்,உழவு,மாடு,மண்                          ஈ) உழவு,ஏர்,மண்,மாடு

7. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில் உள்ள தமிழ் தெரு _______

அ) கரிகாலன் தெரு          ஆ) இராஜேந்திர சோழன் தெரு  

 இ) இராச சோழன் தெரு    ஈ) குலோத்துங்கன் தெரு

8. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

9. தலையில் அணியும் அணிகலன்_________

அ) கிண்கிணி                   ஆ) சுட்டி     இ) சூழி                 ஈ) குண்டலம்

10. வெட்டிய மரங்களுக்கு ஈடாக ____________ நட்டனர்.

அ) கொடிகளை                ஆ) நாற்றுகளை                இ) மரங்களை   ஈ) மரக்கன்றுகளை

11. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பது_______

அ) காலம் மாறுவதை                           ஆ) வீட்டைத் துடைப்பது    

இ) இடையறாது அறப்பணி செய்தலை  ஈ) வண்ணம் பூசுவதை

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்

திண்மையில்லை நேர்நெறுக ரின்மையால்

உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்

வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்

12.இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

அ) வண்மை - வறுமை               ஆ) திண்மை – நேர்மை

இ) உண்மை - வெண்மை         ஈ) பொய் – பல்கேள்வி

13 ) பாடலின் மோனைச் சொற்களைக் குறிப்பிடுக

அ) வண்மை – வெண்மை           ஆ) திண்மை - நேர்மை             

இ) உண்மை - வெண்மை          ஈ) பொய் – திண்மை

14 ) புகழுரை - பிரித்து எழுதுக

அ) புகழ் + இரை               ஆ) புகழ் + உரை    இ) புகழு + உரை     ஈ) புகழு + இரை

15 ) இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) நீதி வெண்பா     ஆ) கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம்    ஈ) தேம்பாவணி

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. காலக்கழுதை கட்டெறும்பானதும் – கவிஞர் செய்தது யாது?.

        வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் எந்த நாள் உலக காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்?

ஆ. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே வியாஸர் பாரதத்தை எழுதினார்.

எதற்காக வியாஸர் பாரதத்தை எழுதினார்?

18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

19. எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம் ஒன்றினைக் குறிப்பிடுக.

·         கலைத்தன்மைக்கு எந்தவிதக் குறைவும் வராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும். சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான் எழுதுகிறேன்.

·         சமூகப்பார்வையோடு கலைப்பணிபுரியவே எழுதுகிறன்.

20. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

·         சிலப்பதிகாரம்

·         மணிமேகலை

·         சீவக சிந்தாமணி

·         வளையாபதி

·         குண்டலகேசி

21.  குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றக் கூடியக் குறளை எழுதுக..

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                     5×2=10

22. மாடிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. இப்பத்தியில் தடித்த எழுத்துகளில் உள்ள தொடர்களின் வகைகளை எடுத்தெழுதுக.

இறங்கினார் முகமது – வினைமுற்றுத் தொடர்

பாடுவதும் கேட்பதும் – உம்மைத் தொகை

23. ஒலித்து– பகுபத உறுப்பிலக்கணம் தருக.

ஒலித்து = ஒலி +த் +த் +உ

ஒலி – பகுதி

த் – சந்தி

த் – இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

24. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.

முதலடி நான்கு சீராகவும் ( அளவடி ), இரண்டாம் அடி மூன்று சீராகவும் ( சிந்தடி ) வரும்,

25. குறிப்பு விடைகளின் வகைகளை எழுதுக

·         ஏவல் விடை

·         வினா எதிர் வினாதல் விடை

·         உற்றது உரைத்தல் விடை

·         உறுவது கூறல் விடை

·         இனமொழி விடை

26. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

அ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

கனிதரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

ஆ. குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்

சுட்டிக்குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்

27. கலைச்சொல் தருக:- அ. Revivalism -  மீட்டுருவாக்கம்   ஆ)  Biotechnology -  உயிரித் தொழில் நுட்பம்

28. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

கவிஞர் – பெயர் பயனிலை

சென்றார் – வினைப் பயனிலை

யார்?  - வினாப் பயனிலை

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                     2×3=6

29. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன் வைத்து எழுதுக.

·         ஒரளவு மேம்படுத்துகின்றன.

·         மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது.

·         மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை.

·         மனிதன் இயந்திரதனமான வாழ்வை வாழ்கின்றான்

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

அம்மானை பாடல்கள்,சித்தர் பாடல்கள்,சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவுபெற்றேன். அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த கதைகளை ஏடுகளில் குறித்து வைத்துக் கொள்வேன்.யான் முறையாக ஏட்டு ஏட்டுக் கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே அதிகம் உண்டு என்றெல்லாம் தமது செவிச்செல்வம் பற்றி ம.பொ.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

அ. ம.பொ.சி அவர்கள் கேள்வி ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?

திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

ஆ. ம.பொ.சி. அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?

அம்மானை பாடல்கள்,சித்தர் பாடல்கள்,சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக இலக்கிய அறிவினைப் பெற்றார்.

இ. ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி. அதனை எவ்வாறு ஈடு செய்தார்?

கேள்வி ஞானம் மூலம் ஈடு செய்தார்.

31. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர் சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

 

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.     2×3=6

( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

·         தொழில் செய்வதற்கு தேவையான கருவி,அதற்கு ஏற்ப காலம்,செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.

·         மனவலிமை,குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல்,நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.

·         இயற்கையான நுண்ணறிவு,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது

·         ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

33. “ மாளாத காதல் நோயாளன் போல் “ என்னும் தொடரிலுள்ள  உள்ள உவமை சுட்டும் செய்திகளை விளக்குக.

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

34. “ செம்பொன் அடிச்சிறு“ எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடலை எழுதுக

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்

          திருவரை யரைஞா  ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைப்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

          பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

          கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

          ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

( இந்த விரைவுத் துலங்கல் குறியீடு வருடினால் இனிய இராகத்தில் இந்தப் பாடலைக் கேட்கலாம் )

                        (அல்லது )

“ நவமணி வடக்கையில் “ எனத் தொடங்கும் தேம்பாவணி பாடலை எழுதுக.

        நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே

( இந்த விரைவுத் துலங்கல் குறியீடு வருடினால் இனிய இராகத்தில் இந்தப் பாடலைக் கேட்கலாம் )

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                2×3=6

35.கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித்தொடர் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

 

36. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்

      தாள்வினை இன்மை பழி – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

பொறி-இன்-மை

நிரை-நேர்-நேர்

புளிமாங்காய்

2

யார்க்-கும்

நேர் – நேர்

தேமா

3

பழி-அன்

நிரை – நேர்

புளிமா

4

றறி-வறிக்

நிரை-நிரை

கருவிளம்

5

தாள்-வினை

நேர் – நிரை

கூவிளம்

6

இன்-மை

நேர் – நேர்

தேமா

7

பழி

நிரை

மலர்

இக்குறளின் ஈற்றுச்சீர் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

37. கொண்டு கூட்டுப் பொருள்கோளினை விளக்கி, எடுத்துக்காட்டு ஒன்று தருக.

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும்.

எ.கா :

எ.கா. ஆலத்து மேல குவளை குளத்துள

         வாலின் நெடிய குரங்கு. - மயிலைநாதர் உரை

மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டா ல் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்துள குவளைஎன்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள்

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                           5×5=25

38. அ) மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்ததது ஏன்? விளக்கம் தருக.

·           இடைக்காடனார் கபிலரின் நண்பர்

·           மன்னன் முன் இடைக்காடனார் பாடலைப் பாடுகிறார்.

·           மன்னன், இடைக்காடனார் புலவரின் பாடலுக்கு செவி சாய்க்காமல் இகழ்ந்தார்.

·           இடைக்காடனார் கடம்பவன இறைவனிடம் செல்கிறார்.

·           இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்.

·           மன்னன் என்னை இகழ்வில்லை, உன்னையும், தமிழையும் இகழ்ந்தார்

·           இவ்வுரையைக் கேட்டு, இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்

·           மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்

·           மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்

( அல்லது )

ஆ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது.அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஆற்றுப்படுத்துதல்

இன்றைய நிலை

முடிவுரை

 

முன்னுரை:

ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் காணலாம்.

ஆற்றுப்படுத்துதல் :

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         மற்றொரு கூத்தனை நெறிப்படுத்துவதாக அமைந்தது.

·         தான் பெற்ற பரிசில்களை மற்றொரு புலவனிடம் கூறி அவனை ஆற்றுப்படுத்துவதாக வள்ளல்கள் காலத்தில் இருந்தது.

இன்றைய நிலை:

·         ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியுள்ளது.

·         நோய் குணமாக இந்த மருத்துவரைக் காணுங்கள் என வழிகாட்டுகின்றனர்.

·         மாணவர்களுக்கு கல்வி வழங்கக் கூடிய கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்களை வழிகாட்டுகின்றனர்.

·         ஏழை, எளியோருக்கு அரசின் உதவிகளைப் பெற வழிகாட்டுகின்றனர்,

·         இன்றைய வழிகாட்டுதல் சூழலில் தன்னார்வ நிறுவனங்கள் பங்கு அளப்பரியது.

·         இன்றைய இணைய வழி வழிகாட்டுதல்கள் எல்லாம் பணம் பெறும் நோக்கமாக மாறி வருகிறது.

முடிவுரை :

        ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. இது இன்று வழிகாட்டுதல் நிகழ்வாக உள்ளது. மேலும் வழிகாட்டுதல் பணம் பெறும் வழிகளாகவும் மாறி வருகிறது.

 

39. அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

                   100,பாரதி தெரு,

                   சக்தி நகர்,

                   சேலம் – 636006.

பெறுநர்

                   ஆசிரியர் அவர்கள்,

                   தினகரன் நாளிதழ்,

                   சேலம் – 636001.

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

          வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.அந்த கட்டுரையில் உழவின் முக்கியத்துவம், உழவுக் குறித்து சங்க காலத்தில் இலக்கியங்கள் எவ்வாறு கூறியுள்ளது?, உழவின் சிறப்பு, இன்றைய நிலையில் உழவு என ஒரு ஆய்வாக எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                                    இப்படிக்கு,

          1. கட்டுரை                                                                                                                       தங்கள்உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                                                       அ அ அ அ அ.

நாள் : 04-11-2023

 

உறை மேல் முகவரி:

பெறுநர்

          ஆசிரியர் அவர்கள்,

          தினகரன் நாளிதழ்,

,         சேலம் – 636001.

 

 

( அல்லது )

  பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

சேலம்

04-11-2023

அன்புள்ள மாமாவுக்கு,

          நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

                             நன்றி,வணக்கம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

பெறுதல்

          திரு.இரா.இளங்கோ,

          100,பாரதி தெரு,,நாமக்கல்.

 

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி         

நாய் என் பசியைப் பற்றி எழுது என்றது

சிறுமி என் வறுமையைப் பற்றி எழுது என்றாள்

நான் எழுதுகிறேன் வறுமையிலும்

பிறர் பசிப்போக்குவதே சிறந்தப் பண்பு  என்று

41. சேலம் மாவட்டம், திருவள்ளுவர் நகர்,  பாரதித் தெரு,கதவிலக்க எண் 50 இல் வசிக்கும்  கோபால்சாமி மகன் தமிழினியன் 2021 -2022 ஆம் ஆண்டில்   படித்து அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  பதினோராம் வகுப்பு கணிதப் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேர விரும்புகிறார். தமிழினியனாக  நினைத்துக் கொண்டு உரியப் படிவத்தை நிரப்புக.





 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 







42. அ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக

1. குறளை ( மற்றவர்ப்பற்றி ) பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

 

( அல்லது )

 

ஆ) மொழிப்பெயர்க்க

1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்வி – ஆல்பிரட் ஐன்ஸ்டீன்

2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி

3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில்

4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது – வின்ஸ்டன் சர்ச்சில்

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                3×8=24

43. அ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘ செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் ‘ பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

குறிப்புச் சட்டம்

 

முன்னுரை

ஊர்திகளில் வெளிப்பாடு

கல்வித்துறையில்

பிற செயல்பாடுகள்

முடிவுரை

முன்னுரை :-

          ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? என்றால் அதன் வெளிபாடு அதிகமாக இருக்கும் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

ஊர்திகளில் வெளிபாடு :

          எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஊர்திகள் வந்து விடும். இவற்றின் மூலம்

·         போக்குவரத்து நெரிசல் குறையும்

·         பயண நேரம் குறையும்

·         எரிபொருள் மிச்சமாகும்.

கல்வித்துறையில் :

        கல்வித்துறையில் இத்தகைய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  உலகின் அதிசயங்களை நாம் இங்கிருந்தே கண்டு கற்கலாம்

பிற செயல்பாடுகள்:

·         மனிதர்களிடம் போட்டியிடலாம்

·         பல்வேறு இடங்களில் மனிதர்கள் வழங்கும் சேவைகளை வழங்கலாம்.

·         சாக்கடைகளை சுத்தம் செய்யும் இயந்திர மனிதன் கண்டுப்பிடிக்கலாம்.

முடிவுரை :

        செயற்கை நுண்ணறிவு கருவிகளால் மனிதர்களின் வேலைபளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

( அல்லது )

ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு . குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

        நாட்டின் தேசிய விழாக்களில் பங்கெடுப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அதிலும் மாணவர்களாகிய நாம் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள். நாட்டின் குடிமக்கள். நமக்கு இருக்க வேண்டிய உணர்வுகளும், நாட்டுப்பற்றையும் இக்கட்டுரையில் நாம் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        நாம் எத்தனையோ விழாக்களைக் கொண்டாடி வருகிறோம். மதங்களுக்கு விழாக்கள், சமுதாய விழாக்கள், தெரு விழாக்கள் என பலதரப்பட்ட விழாக்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் நம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.நாட்டு விழாக்களில் மாணவர்களாகிய நாம் பல்வேறு விதமான தகவல்களை ஆசிரியர்கள் மூலம் நாம் பெறுகிறோம். அவற்றையெல்லாம் நாம் அனைவரிடத்தும் கொண்டு சேர்க்க வேண்டும்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு,உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும் இந்தியா சுதந்திரம் அடைய பல்வேறு தியாகிகள், தலைவர்கள், கவிஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, பல்வேறு விதமானப் போராட்டங்களில் பங்குக் கொண்டு இந்தியாவிற்கான சுதந்திரம் வாங்கித் தந்தனர். அந்த விடுதலை போராட்டங்களில் பெண்களும் கலந்துக் கொண்டு தங்களின் வீரத்தை பறைசாற்றினர். அப்பேர்ப்பட்ட பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை மாணவர்களாகிய நாம் அந்த போராட்டங்களை மதித்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்போம் என உறுதி பூணுவோம்..

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம்,இளஞ்செஞ்சிலுவை சங்கம்,NSS,NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும். பல்வேறு சமூக சேவை அமைப்புகள் மூலம் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வோம்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

நாட்டின் சுதந்திரத்தை உயிர் மூச்சு உள்ளவரை காப்போம் என உறுதி பூணுவோம். இது நம் நாடு, பாரத நாடு என தோள் தட்டி அனைத்து நாட்டு விழாக்களையும் தேசப் பற்றுடன் கொண்டாடிவோம்.

 

44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதிக் கொண்டு விவரிக்க.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

 

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

( அல்லது )

ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

.

45. அ) கொடுக்கப்பட்ட குறிப்புகள் கொண்டு நீங்கள் சென்று வந்த அரசுப்பொருட்காட்சிப் பற்றிக் கட்டுரை எழுதுக;

குறிப்புகள் : முன்னுரை- பொருட்காட்சி – நுழைவுச்சீட்டு-பல்துறை அரங்கம்-அங்காடிகள்- பொழுதுப்போக்கு-முடிவுரை

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

பொதுவாக அந்ததந்த மாவட்டத் தலைநகரங்களில் அரசுப் பொருட்காட்சி அமைக்கப்படும். இந்த பொருட்காட்சியில் அரசின் சாதனையை விளக்கும் பல்துறைகளின் அரங்கங்கள், பொழுது போக்கும் இடங்கள், உணவகங்கள், குழந்தைகளின் விருப்பமான இராட்டினங்கள் என அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் நாங்கள் எங்கள் ஊரில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பொருட்காட்சி :

பொதுவாக பொருட்காட்சி மக்கள் அதிகமாக வந்துப் போகக்கூடிய இடமாகவும், அனைத்து வெளியூர் மக்களுக்கும் தெரியும் படியாகவும், போக்குவரத்து இடையூறு இல்லாத இடமாகவும் பார்த்து அமைக்கப்படும். எங்கள் ஊரில் உள்ள பொருட்காட்சியும் மக்கள் அதிகமாகக் கூடும் இடமான பேருந்து நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டது. கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில் அனைவரையும் ஈர்த்தது. பொருட்காட்சிப் பற்றிய வானுயர விளம்பரப் பலகை அனைத்து மக்களையும் தன்னுள் ஈர்த்தது. அதனைக் காணும் போதே உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தது எங்கள் ஊரில் நடைப்பெற்ற அரசுப் பொருட்காட்சி.

நுழைவுச் சீட்டு:

        பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும், சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. நுழைவுச்சீட்டு அவசியமான ஒன்று. அந்த நுழைபுச் சீட்டு பரிசோதனைக்கு உட்பட்டதாக இருந்தது.

பல்துறை அரங்கம் :

        அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும், தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அரசின் பல்துறை அரங்கில் ஒவ்வொருத் துறைக்கும் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் அந்தத் துறையின் செயல்பாடுகள், சாதனைகள், அடுத்துச் செய்யப்போகும் எதிர்கால செயல்பாடுகள் என விளக்கப்படங்களாக அமைக்கப்ப்பட்டு இருந்தது. அனைத்துத் துறையின் தகவல்களையும் நாம் ஒரே இடத்தில் காண முடிந்தது. மேலும் அந்தத் துறையின் சம்பந்தப்பட்ட நபர் ஒருவரும் அங்கு நியமிக்கப்பட்டு இருந்ததார். அவர் அங்கு காணவரும் மக்களுக்கு தங்கள்த் துறையின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். ஒவ்வொரு துறையின் அரங்கமும் சிறப்பான முறையில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அதன் நுழைவாயிலும் அமைக்கப்பட்டு இருந்தது

அங்காடிகள்:

        வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. மக்களுக்குத் தேவையான அனைத்து விதமானப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கப் பெற்றதால் அவர்களின் நேரமும், அலைச்சலும் குறைந்தது. மேலும் அங்காடிகள் விலை மலிவானப் பொருட்கள் முதல் விலை அதிகம் உள்ள பொருட்கள் வரை அனைத்து ஒரே இடத்தில் கிடைப்பெற்றது. அந்த அங்காடிகளும் மக்களைத் தன் பக்கம் ஈர்க்க வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட விளக்குகள், சலுகைகள் கொண்ட வண்ணமிகு விளம்பரப் பலகை ஆகியவற்றை அமைத்து மக்களை ஈர்த்தன.

பொழுதுபோக்கு :

        சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டினங்களும் நிறைய இருந்தன. குழந்தைகளுக்கு என தனியாக விளையாடக் கூடிய இடமும் அமைக்கப்பட்டு இருந்தது. சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிட அதிகமான பொழுது போக்குகள் இருந்தன. குழந்தைகளை மகிழ்விக்ககூடிய அனைத்து பொழுதுப் போக்குகளுக்கும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

முடிவுரை:

        எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வு மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அரசுப் பொருட்காட்சியானது ஆண்டுக்கு ஒரு முறை அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக அமைக்கப்பட்டு வருகிறது. அரசுப் பொருட்காட்சியின் மூலம் அனைத்து நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் காணக் கிடைப்பது அரிது. நீங்களும் உங்கள் பகுதியில் அரசுப் பொருட்காட்சி அமைக்கப்பட்டால் சென்று பாருங்கள். மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது. நாங்கள் சென்று வந்த அரசுப் பொருட்காட்சிப் பற்றி இக்கட்டுரையில் கண்டோம்.

( அல்லது )

ஆ) கட்டுரை எழுதுக:-

        தலைப்பு – ‘ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்’

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

        விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

          பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி :       கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

        மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

ஆறு முதல் பத்து வகுப்பு வரை தமிழ் பாடக் கற்றல் வளங்களை இலவசமாக பெற்றிட





         

         

         

         

         

         

                  

         

WWW.TAMILVITHAI.COM                                            WWW.KALVIVITHAIGAL.COM

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post